இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0 7

 இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்போது,  பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் (WhatsApp) இணைப்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடியானது மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பணியகத்தின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், டிசம்பர் 13ஆம் திகதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 300,162 ஆக உயர்ந்துள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் 3 இலட்சம் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது முறையாக இது என பணியகம் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.