போர்க்களமான தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் – கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்

0 3

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று இடம் பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் (S.Sivamohan) கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதன்போது அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கடும் தொனியில் தெரிவித்தார்.

மாவைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி வருவீர்களா என கேட்குமாறு சிவமோகன் தெரிவித்த போது இது ‘கோல் சென்ரர் அல்ல, கட்சி.’ “உங்கள் வைத்தியசாலை அல்ல” இது என்று சாணக்கியன் பதில் அளித்தார்.

அவர் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர். இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்தை சிரேஸ்ட உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் (M. A. Sumanthiran) அவரை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை.

இந்த நிலையில் 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகை தந்திருந்தார்.

இதன்போது “உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது மாவை ஐயா. எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்த பக்கம் இருங்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவருக்கு தெரிவித்தார்.

அதனை பொருட்படுத்தாத மாவை சேனாதிராஜா முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார். அதன் பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் சற்று முன்னர் (14.12.2024) ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில், செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன், மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூடியுள்ளது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.