ஈழத் தமிழரின் வரலாறு தெரியாமல் பிதற்றும் பதுளை எம்.பி : சபா குகதாஸ் விசனம்

6

பதுளை (Badulla) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவரை தெரிவு செய்த மாவட்டத்தில் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்ற போது அவற்றை கருத்தில் கொள்ளாது வடக்கு கிழக்கு ஈழத் தமிழரின் வாழ்விட வரலாறு தெரியாமல் ஆளும் கட்சிக்கு சாமரை வீசுவதற்காக முந்திரிக் கொட்டை போல பிதற்றியுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வராஜ் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் பேரினவாதத்தின் சிந்தனை எனவும் இணைந்த வடகிழக்கு உள்ளடங்கிய தனிநாட்டு கோரிக்கையை தான் நிராகரிப்பதாவும் தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டியே சபா குகதாஸ் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செல்வராஜ் எம்.பி முடிந்தால் நீங்கள் பெருந் தோட்ட தொழிலாளரின் இரண்டாயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுங்கள்.

எதிரணியில் இருக்கும் போது நீங்கள் சார்ந்த அணியினர் மிக உருக்கமாக பெருந் தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரத்தில் போராடினார்கள் இச்சந்தர்ப்பத்தில் அதனை நிறைவேற்றி வாக்களித்த உங்கள் மக்களுக்கு உதவுங்கள்.

இலங்கைத்தீவில் மூன்று ராசதானிகள் இருந்த போது வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர் ராட்சியமாக இருந்த வரலாறு தொடங்கி இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை வரலாற்றைப் படியுங்கள்.

இணைந்த வடகிழக்கு மாகாணங்களை நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பியின் சிங்கள பேரினவாதத்தை மறைக்க இதுவரை எந்த சிங்கள ஆட்சியாளனும் கையாளாத தமிழ் பேரினவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி துதி பாடுவதை நிறுத்துங்கள் செல்வராஜ் எம்.பி.

உங்களுக்கு முந்திய தலைமுறையை நாடற்றவர்களாக பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு சிங்கள பேரினவாதம் வெளியேற்ற முற்பட்ட போது மிக கடுமையாக போராடியவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தலைவர்களும் மக்களும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

எனவே, பறிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடும் வடக்கு , கிழக்கு ஈழத் தமிழர்களை நோக்கி தமிழ் பேரினவாதம் என்ற வார்த்தையை பேசுவதை தவிருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.