நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும் தான் காரணம் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளரும், மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான புபுது ஜயகொட (Pubudu Jayagoda)இன்று (9) தெரிவித்தார்.
இலங்கையில் தேங்காய் ஏற்றுமதி 800 மில்லியனில் இருந்து 1,400 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு லயன்ஸ் கழகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே புபுது ஜயகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் வருடாந்தம் சராசரியாக 3,100 மில்லியன் தேங்காய் விளைச்சல் இடம்பெறுவதாகவும், இந்த ஆண்டு சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைந்தது பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு சுமார் 2,100 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த ஜயகொட, எஞ்சிய தேங்காய் அறுவடையில் சுமார் 800 மில்லியன் தேங்காய் நாட்டின் பாவனைக்காகப் பயன்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேங்காய் ஏற்றுமதி செய்வதன் மூலம் தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், தேங்காய் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு ஆண்டுதோறும் 400 முதல் 600 மில்லியன் டொலர்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
சுமார் 700 மில்லியன் தேங்காய் விளைச்சல் குறைவடைந்துள்ளமை குறுகிய காலப் பிரச்சினையல்ல எனத் தெரிவித்த புபுது ஜயகொட, நாட்டில் தென்னை விளைச்சலைப் பாதிக்கும் பல நீண்டகால விளைவுகள் காணப்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.
Comments are closed.