அரசியலமைப்புக் குழு உறுப்பினராக சிறீதரன் எம்.பி நியமனம்

4

நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2024) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (UNP) தவிர்ந்த ஏனைய 11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரிலிருந்து அரசியலமைப்புக் குழுவுக்கான பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானை நாமல் ராஜபக்ச முன்மொழிந்தார். அதேவேளை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தன்னைத்தானே பிரேரித்த போதும், பின்னர் போட்டியிலிருந்து தானாகவே விலகியிருந்தார்.

சிவஞானம் சிறீதரனை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை வரவேற்று சிறீதரனது நியமனத்தின் தேவைப்பாட்டையும் வலியுறுத்தியிருந்தார்.

குறித்துரைக்கப்பட்ட 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் சமுகமளிக்காததுடன், முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்களும் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.

சிவஞானம் சிறீதரன் 11 வாக்குகளையும்இ ஜீவன் தொண்டமான் 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதற்கமைய ஒருவாக்கு வித்தியாசத்தில் அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறீதரன் தெரிவாகி உள்ளார்.

இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.