அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை!

7

அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ விநியோகப் பிரிவின் அறிக்கைகளின் பிரகாரம் சுமார் 300 மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறையாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களது சங்கத்தின் அழைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமால் சஞ்சீவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும் பொறிமுறைமையில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகாரிகள் இருந்தால் அவர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துப்பொருட்கள் இவ்வாறு பற்றாக்குறையாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் இந்த மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக காணப்பட்டதாகவும் இதனால் சில மரணங்கள் பதிவானதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென டொக்டர் சமால் சஞ்சீவ கோரியுள்ளார்.

Comments are closed.