நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

19

நியூசிலாந்து ( New Zealand) அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில்  இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த 13-ம் திகதி தொடங்கியது .

முதல் ஒருநாள் போட்டியில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் (Pallekele) இன்று (17) நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

மார்க் சாப்மேன் 76 ஓட்டங்களும், மிட்ச் ஹே 49 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் வாண்டர்சே, தீக்சனா தலா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் குசாஷல் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார்

பதும் நிசங்கா 28 ஓட்டங்களும், ஜனித் லியாங்கே 22 ஓட்டங்களும் எடுத்தனர்.குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்களும், தீக்சனா 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.நியூசிலாந்து அணி சார்பில், பிரேஸ்வெல் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Comments are closed.