அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (10) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர்.
இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை. ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது.
வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக்காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம்கொடுத்தோம்.
இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.
ஆனால் அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும்.
அத்துடன் எமது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும்“ என தெரிவித்தார்.
Comments are closed.