முல்லைத்தீவில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட 76 வயது முதியவர்

8

முல்லைத்தீவு கற்சிலைமடுவில் 76 வயது முதியவர் மூர்த்தனமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை வேளை தனது மாடுகளை பட்டிக்கு சாய்த்துக்கொண்டு போகும் வழியில் அதே இடத்தைச் சேர்ந்த தனிநபரால் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட முதியவர் தன் மனைவியுடன் வலதுகரை கற்சிலைமடுவில் வாழ்ந்து வருகின்றார்.

முதியவர் தாக்கப்படும் போது அவர் எழுப்பிய சத்தம் கேட்டது அயலவர் ஓடிச்சென்று தடுத்ததோடு முதியவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் உதவியுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு (மாஞ்சோலை என மக்களால் அழைக்கப்படும்) கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

முதியவரின் உடலில் பலமாக இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதியவரின் இயல்பான அன்றாட செயற்பாடுகளை இது சில நாட்களுக்கு பாதிக்கும் எனவும் இது தொடர்பில் கற்சிலைமடுவைச் சேர்ந்த சமூக சேவையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.

முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதியவரின் வயல் காணியில் உள்ள பனை மரங்களை அவரின் அனுமதியில்லாது தறித்து அழிக்கப்பட்டது தொடர்பில் முதியவர் தன் எதிர்ப்பை தெரிவித்தமையாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகவும் சொந்த பராமரிப்பில் பேணி வந்திருந்த தன் காணியில் உள்ள பனை மரங்களை தறிப்பதற்கான எந்த தேவைகளும் இல்லாத போதும் தறிப்பது தொடர்பில் முதியவர் தன் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றார்.

அதனுடன் தொடர்புபட்ட அரச அதிகாரிகள் முதியவரின் நியாயமான கோரிக்கைகளை செவிசாய்த்து உருப்படியான தீர்வுகளை பெற்றுக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தாமையே அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் எனவும் அத்தகவல்கள் மூலம் மேலும் அறிய முடிவதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.