உப்புல் தரங்க மீதான பிடியாணை உத்தரவை இரத்துச் செய்த நீதிமன்றம்

5

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்களை கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி, சட்டமா அதிபரால் தொடரப்பட்ட ஆட்ட நிர்ணய வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக, உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் ;நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் உப்புல் தரங்க நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நேரில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது மனுதாரர் உபுல் தரங்க சார்பில், சட்டத்தரணி நிசான் சிட்னி பிரேமதிரத்ன, தமது கட்சிக்காரர் குறித்த சாட்சிய விடயத்தில் கவனக்குறைவாகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன் 2024 அக்டோபர் 8ஆம் திகதியன்று விசாரணையைத் தவிர்ப்பதற்கு மனுதாரருக்கு வேண்டுமென்றே எந்த காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் உப்புல் தரங்க 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி மாத்தளை மேல்நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வருவார் என உறுதிமொழியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் உப்புல் தரங்கவின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச்செய்தது.

Comments are closed.