இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி…! எச்சரித்த ஈரான் இராணுவம்

5

ஈரானின் சக்தியையும் உறுதியையும் இஸ்ரேலை உணரச் செய்வோம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei) எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய தேசத்தின் இந்த சக்தியையும் உறுதியையும் சியோனிச ஆட்சிக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது நமது அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும். இஸ்ரேலின் தீய செயலை மிகைப்படுத்தப்படவோ அல்லது குறைத்து மதிப்பிடப்படவோ கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

நான்கு இராணுவ வீரர்களின் இறப்பிற்கு காரணமான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் “தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஹ்ரான் போரை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக ஈரான் இராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. ஈரான் இராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் சனிக்கிழமை அதிகாலை ஈரானின் இராணுவ தளங்கள் தாக்கியது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் ஈரான் வான் பாதுகாப்பு பிரிவு மிகச்சிறப்பாக செயற்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலின் தாக்குதல் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் ஈரான் நாட்டு அரசு தனது இராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாகவும். போர் தொடர்பான முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments are closed.