களனி பல்கலைக்கழகத்தில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தில் நான்காம் ஆண்டில் கணக்கியல் கற்கை நெறியில் கல்வி கற்கும் பிரின்ஸ் ராஜு பண்டார என்ற 24 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பணிப்பாளரிடம் இருந்து விசாரணை அறிக்கை வரவழைக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை இன்று (24) பெறப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிபில பிரதேசத்தில் வசிக்கும் இம்மாணவனின் குடும்பத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாணவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருவதாகவும், விடுதியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாணவனின் மரணம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர் பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரா மாணவர் விடுதியின் 416ஆம் இலக்க அறையில் அவர் தங்கியிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, களனி பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.கே. தேவப்பிரியவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம இன்ஸ்பெக்டர் ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே உயர்தர பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக ஆசிரியராக பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.
Comments are closed.