விஜித ஹேரத்தின் கூற்றுக்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு

16

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் முன்வைத்த கூற்றை ரணில் தரப்பு முற்றாக மறுத்துள்ளது.

மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹேரத், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தடையின்மை சலுகையினால், சட்ட நடவடிக்கைகள் முன்னர் ஸ்தம்பிதமடைந்திருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.  

எவ்வாறாயினும், இந்த கூற்றுக்களை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியின் தண்டனையின்மை சலுகையை(immunity) கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தண்டனையின்மையை கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், அத்துடன் உண்மையில், அத்தகைய கோரிக்கையை அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான  வழக்கில் முன்னாள் ஜனாதிபதி  சாட்சியாக கூட குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூற்று, வேண்டுமென்றே ஊடகங்கள் உட்பட முழு பொதுமக்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே பொறுப்புள்ள அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர், தெரிந்தோ தெரியாமலோ பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமற்றது என்றும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.