புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தை எந்நேரமும் கலைப்பதற்குத் தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக சட்டமா அதிபரிடமும் பிற சட்டத்துறை வட்டாரங்களிடமும் நேற்று (23.09.2024) பகல் அவர் ஆலோசனை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் அதற்குரிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காக நாடாளுமன்றத்தை ஒரு தடவை கூட்ட வேண்டும் என்றும் சில தரப்புகள் தெரிவித்தாலும் சட்டரீதியாக அது தேவையற்றது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட ஒதுக்கீட்டை நேரடியாக வழங்கும் அதிகாரம் அரசமைப்பின் 150 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உண்டு என சட்டத்துறை வட்டாரங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தில் அநுரவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தை தற்போது கூட்டுவது அவர் நிறுவக்கூடிய அரசைத் தோற்கடிக்கச் செய்யும் வாய்ப்பைத் தரும்.
இதனால், நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே அதனை கலைத்துவிடும் ஆலோசனையை சட்ட வல்லுநர்கள் அவருக்கு வழங்கியுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் அநுரவின் இடத்திற்கு நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சமாதான நீதிவான் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ததும் நாடாளுமன்றக் கலைப்பை ஜனாதிபதி முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த லக்ஷ்மன் நிபுண ஆராச்சி அந்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments are closed.