2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது, அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் மேலதிகமாக 900 பில்லியன் ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில் வரி கொள்கையை மறுசீரமைக்காமல் உயரளவிலான வரி வருமானத்தை ஈட்டிக்கொள்வது சவால்மிக்கது.
அரசாங்கத்தின் இலக்குக்கமைய வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதாயின் மக்கள் சுய விருப்பத்துடன் வரிச் செலுத்துவதற்கு முன்வர வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக அரச சேவைக்கு 30 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரணிகளால் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க கூடும். நலன்புரி திட்டங்களுக்கு அரசாங்கம் பாரிய தொகை நிதியை செலவு செய்கிறது. இதுவும் பணவீக்கத்தை அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தேசிய மட்டத்தில் பெற்றுக்கொள்ளும் கடன்களை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டளவில் தேசிய கடன்களுக்கான வட்டி செலுத்ததை வரையறுப்பதற்கு இந்த ஆண்டு அரச கடன் பெறுதலை கட்டம் கட்டமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஓய்வூதிய கொடுப்பனவுக்காக தற்போது 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. எதிர்காலத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் அதுவும் சவால்மிக்கதாக அமையும். உற்பத்தி துறையின் வினைத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்த சிறந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமைவாகவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடனை செலுத்துவதற்கு ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை செயற்படுத்தி அதன் வினைத்திறனான பயனை பெற்றால் மாத்திரமே 2028ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்களை பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.