இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில், பாக் வளைகுடாவில் நீடித்து வரும் கடற்றொழிலாளர் மோதலுக்கு இந்திய தரப்புகள் இழுவை முறையை பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடங்களாக கடற்றொழிலாளர் பிரச்சினை முக்கிய இராஜதந்திரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த வாரம் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து இனக்குழுக்கள் மற்றும் புவியியல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.
எனவே, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமது கட்சிக்கு உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டில் 17.2 கிலோவாக இருந்த நாட்டின் தனிநபர் மீன் நுகர்வு இப்போது 11.07 கிலோவாகக் குறைந்துள்ளது. இது மக்களின் புரத உட்கொள்ளல் குறைவதைப் பிரதிபலிக்கிறது.
இந்தநிலையில், ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய, இலங்கையின் கடல் மற்றும் நமது கடல் பல்லுயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பலருக்கு இன்னும் தமிழ்நாட்டில் குடும்ப உறவுகள் உள்ளன.
எனவே, கடற்றொழில் பிரச்சனையில் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்திய மற்றும் தமிழக மக்களையும் அரசாங்கங்களையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.