புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

6

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வதில் உள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங் பிரதிநிதிகள் குழுவிற்கும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாரத்னவிற்கும் (Madhura Senarathna) இடையில் இடம்பெற்றுள்ளது.

அங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது உச்ச நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்பட வேண்டுமென இரு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, போட்டிப் பரீட்சை நடத்தி ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும் என்றும் அதிகபட்சமாக 45 வயது வரை வயது வரம்பைக் கருத்தில் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உரிய தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வேறு அரச அலுவலகங்களுக்கு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.