வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: சீனத் தூதுவர் வலியுறுத்து

7

இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக சில தரப்புக்கள் தமது பொருளாதார சூழ்நிலையை சாதகமாக்க முயற்சிக்கும் நேரத்தில் இந்த கொள்கை அவசியமானது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங் கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சீனாவின் நிலைப்பாடு மற்றும் இலங்கையுடனான எதிர்கால உறவுகளைத் தெளிவுபடுத்திய குய், இலங்கை, தமது பொருளாதார நிலைமையிலிருந்து மீள்வதற்கு, ஏனைய நாடுகளின் உதவி தேவை என்பதை சில தரப்பினர், இலங்கை தரப்பிடம் சித்தரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சித்தரிப்பு தவறானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருப்பதற்கோ அல்லது இலங்கை மக்களுக்கு உதவுவதற்கோ எந்தவொரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் சீனா கொண்டிருக்கவில்லை. இலங்கைக்கான சீனாவின் உதவி, அது ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கும், வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ளவும் உதவும் என்று தாம் உறுதியாக நம்புவதாக குய் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தொடர்ச்சியான தேர்தல்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம், இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. அத்துடன் இலங்கையின் எதிர்காலத்தில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் குய் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் பிரவேசிப்பதற்கான சீனாவின் கோரிக்கையை முன்னாள் அரசாங்கம் நிராகரித்ததால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இரண்டு நாடுகளுக்கும் வலுவான உறவுகள் இருந்தபோதிலும், இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டமை ஏமாற்றமளித்ததாக குய் தெரிவித்துள்ளார். மாலைத்தீவு கடற்பரப்பில் அந்த ஆராய்ச்சிக் கப்பல்கள் வரவேற்கப்பட்டதாகவும், ஆனால் இலங்கை அதை நிராகரித்ததால் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்ததாக சீனாவின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.