பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை !

5

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி திக்கம் வடிசாலை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வி.சகாதேவன் (V. Sakadevan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவிற்கு நேற்றையதினம் (18) விஜயம் செய்த வி.சகாதேவன், நகரப் பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார்.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றேன்.

கடந்த காலங்களில் பனை வளம் சார்ந்த விடயங்களை பாதுகாப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது.

பனை உற்பத்திசார் தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் சூழ்நிலையில் சபை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது.

திக்கம் வடிசாலை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை எனக்கு வழங்கியுள்ளார்.

தான் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு தனது வேலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும், இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்றும், தான் உயிரை மாய்க்கும் நிலைக்கு சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

அவரது அதிகாரப் பிடியில் பனை அபிவிருத்திசபை மட்டுமல்ல வடக்கு மாகாணமும் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நிலையில் இந்த நியமனத்தின் மூலம் தமக்கு நடந்த அநியாயங்களை வெளிக்கொண்டு வர பலர் துணிந்திருக்கிறார்கள்.

இலங்கையின் மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனத்திடம் அந்த தொழிற்சாலை கையளிக்கப்பட்டுள்ளது, பனஞ்சாராய உற்பத்தி ஒன்றும் அங்கு நடந்தது.

ஆனால் இது பற்றிய எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நான் சபையை பொறுப்பெடுத்த பின்னரே அந்த ஒப்பந்தத்தின் பிரதி பனை அபிவிருத்தி சபைக்கே கிடைத்தது.

முதல்தகவல் அறிக்கையின் பிரகாரம் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய் நேரடியான பணப்பரிமாற்றம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்காக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது.

அதனைவிட 2014ஆம் ஆண்டு சபையின் அன்றைய முன்னாள் தலைவரின் அறிக்கையின்படி 69 மில்லியன் பெறுமதியான மதுசாரம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டாக கூறியிருக்கிறார்.

அங்கு நடைபெற்ற கொள்ளைகள் முறைகேடுகள் மிக அதிகமானவை இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது, சாட்சியங்களை சேகரித்து வருகின்றோம்.

இந்த விசாரணைகளில் யாரும் தப்ப முடியாது. இந்த தொழிலை மீள கட்டுவது சவாலான ஒரு விடயமாக மாறியிருக்கிறது, வடிசாலைகள் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு குருநாகல் புத்தளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தென்னங் கள்ளு இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நெடுந்தீவுக்கும் தென்னங்கள்ளை விற்பனை செய்யும் நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது, பனைவளம் இருந்தும் அரசியல்வாதிகளின் ஊழல் நிறைந்த செயற்பாட்டால் இந்த தொழில் அழிந்து போயுள்ளது.

நெடுந்தீவில் பிரதேசசெயலாளர் ஒருவரால் சட்டவிரோதமாக கள் உற்பத்தி நிலையம் நடாத்தப்பட்டு தென் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல முறைப்பாடுகள் கிடைக்கிறது. பனை வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன்.

பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அத்துடன் 11 மாவட்டங்களில் பனைவளம் உள்ளது எனவே முழுமையான கணக்கெடுப்பொன்றை செய்ய இருக்கிறோம்.

அதன் பின்னரே அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதா என்ற விடயத்தை ஆராயவுள்ளோம். பனை மீள் நடுகையின் போது நடந்த மோசடிகளால் நிதி அமைச்சு அதனை இடைநிறுத்தியிருக்கிறது.

பனை அபிவிருத்திச்சபை தமது சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படாத காரணத்தால் அரசாங்கம் அந்த செயற்பாட்டை இடைநிறுத்தியிருந்தது.

அதனை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பனஞ் சாராயத்தினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும்.

அதற்கான அனுமதியை எமது சபையே வழங்கும் தனியாக எவரும் செய்யமுடியாது ஒருசில ஊழல்வாதிகள் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் லஞ்ச மோசடியில் ஈடுபட்டு புதியவர்கள் இந்த தொழிலுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

அவ்வாறான ஒரு விடயத்திற்காக 15 மில்லியன் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர் அதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.