ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மாயம்

10

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகத்தின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமான செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒன்பது கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 6 வண்டிகள் மற்றும் இரண்டு டிராக்டர்கள் அந்த வாகனங்களில் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சோதனையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாகவும், அதன் பின்னர் 22 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு ஏறக்குறைய ஆறரை மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட போதிலும், காணாமல்போன வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளை தொடர்வதற்கான முக்கிய தகவல்கள் எதுவும் அவரது வாக்குமூலங்களில் இருந்து வெளியாகவில்லை எனவும் அறியமுடிகின்றது.

மேலும், பதவியேற்ற நாள் முதல் கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், பழைய கோப்புகளை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும், கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாற்று வழிகளில் காணாமல்போன வாகனங்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments are closed.