விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினம்: சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணை!

3

யாழ்ப்பாணம் (Jaffna)- வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பிரபாகரனின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பதாகையினை நீக்கிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.