வெப் சீரிஸ் என்பது ஹாலிவுட் கலாச்சாரத்தில் மட்டுமே இருக்க தற்போது இந்தியாவிலும் கொடிக்கட்டி பறக்கிறது. அதிலும் கொரோனா காலத்துக்கு அப்றம் பல வெப் சீரிஸுகளை படையெடுக்க, எப்போதும் ஜாலியான அதே நேரத்தில் தரமான படங்களை கொடுத்த ராதாமோகனின் இயக்கத்தில் யோகிபாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, மைனா நந்தினி, நிழல்கள் ரவி நடிப்பில் 6 எபிசோட்-களாக வெளிவந்துள்ள Hotstar-ல் சீரிஸ் தான் இந்த சட்னி சாம்பார். சரி எப்படியிருக்க பார்ப்போம்.
ஊட்டியில் இப்படி ஒரு சாம்பார் எங்கும் கிடைக்காது, ஊர் உலகமே இந்த சாம்பார்-காக தான் வரும் என்பது போல் அமுதா கஃபே என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார் நிழல்கள் ரவி. அன்பான மனைவி, அழகான குடும்பம் என அவர் இருக்க, அப்போது எதிர்ப்பாராத விதமாக நிழல்கள் ரவிக்கு கேன்சர் 3வது கட்டத்தை அடைய, தன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அப்போது தன் மகன் கயல் சந்திரனை அழைத்து அம்மாவை சந்திப்பதற்கு முன்பு சென்னையில் ஒரு பெண்ணிடம் வாழ்ந்து வந்ததாகவும், அப்போது ஒரு சில காரணத்தால் அந்த பெண்ணை விட்டு வரவேண்டிய கட்டாயம், அந்த பெண் இப்போது உயிரோடு இல்லை, ஆனால் என் பையன் அங்கு இருக்கிறான், என கூறி அவனை அழைத்து வர வேண்டும், நான் இறந்தால் என் சடங்குகள் அனைத்தும் அவனும் செய்ய வேண்டும், இந்த குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்க வேண்டும் என சத்தியம் வாங்குகிறார்.
அதற்காக கயல் சந்திரன், நிதின் சத்யா, இளங்கோ ஆகியோர் அந்த பையனை தேடி வர, அந்த பையன் யோகி பாபு சென்னையில் ஒரு தள்ளுவண்டி சாப்பாடு கடை நடந்த, அவர் எவ்ளோ சொல்லியும் அப்பாவிற்காக யோகிபாபுவை ஊட்டிக்கு தூக்கி வருகின்றனர்.
அவர் வந்து நிழல்கள் ரவியை பார்த்தவுடன் அவரும் இறக்கிறார், அதன் பிறகு யோகிபாபு அந்த குடும்பத்தை ஏற்றார்களா என்பதே மீதிக்கதை.
ராதாமோகன் படம் என்றாலே மக்களின் எமோஷ்னல் உணர்வுகாலை மிக அழகாக படம்பிடித்து ஆடியன்ஸிடம் காட்டுவார், அப்படி தான் இந்த அமுதா கஃபே-யிலும், சட்னி சாம்பார் என்ற டைட்டிலை பார்த்ததும் எதோ இரண்டு ஹோட்டலுக்கான யுத்தம் என்று பார்த்தால், மனிதர்களின் வழக்கமான எமோஷ்னல் விஷயங்களை தன் பாணியில் அழகாகவும் காமெடியான வசனங்களுடன் செம ஸ்கோர் செய்துள்ளார் ராதாமோகன்.
அதிலும் யோகி பாபு entry அப்றம் அவர் வசனங்கள் தன் அப்பா நிழல்கள் ரவி தன்னையும் தன் அம்மாவையும் விட்டுவிட்டு ஓடியதால் கடைசி வரை அப்பாவை திட்டிக்கொண்டே இருக்க, தன் அப்பாவால் பல குடும்பங்கள் இங்கு நன்றாக வாழ்கிறது என்று தெரிந்ததும் மனம் மாறுவது என கெரியர் பெஸ்ட் நடிப்பை கொடுத்துள்ளார்.
கயல் சந்திரன், வானி போஜன், மைனா நந்தினி, நிதின் சத்யா, சார்லி, இளங்கோ என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அதிலும் எப்போதும் குடித்து தன் வாழ்க்கை மட்டுமின்றி வானி போஜன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கும் அப்பாவாக சார்லி நம் வெறுப்பை எல்லாம் சம்பாதித்து நடிப்பிலும் அசத்தியுள்ளார்.
அதோடு கயல் சந்திரனை தவிற அவருடைய அக்கா, அம்மா யாரும் யோகி பாபுவை ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் யோகி பாபு தன் குணத்தால் எப்படி அந்த குடும்பத்தில் நுழைந்தார், என்பதன் காட்சிகள் அத்தனை அழகு.
ஆனால், இத்தனை அழகான காட்சிகள் நகர்ந்தாலும் கடைசியில் நிழல்கள் ரவி இந்த காரணத்திற்காக தான் யோகிபாபு அம்மாவை விட்டு வந்தார் என்று தெரியும் போது இது என்னடா வடிவேலு பேக்கரி காமெடி போல் ஆகிருச்சு என சொல்வதை தவிர்க்க முடியவில்லை.
மேலும், யோகிபாபு அம்மாவாக குக் வித் கோமாளி தீபா நன்றாகவே நடித்திருந்தாலும், அவரின் யங் ஏஜ் என்று காட்டும் போது அவருக்கு வேறு யாராவது கதாபாத்திரம் செய்திருக்கலாம் என தோன்றியது.
வானி போஜனுக்கும் யோகிபாபுவிற்கும் இருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி அட இது என்னப்பா இவுங்க லவ் பண்றாங்களா இல்லை நண்பர்களா என ஒரு கேள்வி வந்துக்கொண்டே இருக்க, கடைசியாக யோகிபாபு வானி போஜனிடம் ப்ரோபோஸ் செய்யும் இடம் ரசிக்க வைக்கின்றது.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை என்று அனைத்தும் டீசண்ட்.
மொத்ததில் சட்னி, சாம்பார் தனித்தனியாக இருப்பதை விட சேர்ந்து இருந்தால் இன்னும் சுவை அதிகம் என்பதை ராதாமோகன் மீண்டும் தன் ஸ்டைலில் அருமையான விருந்து வைத்துள்ளார்.
Comments are closed.